காணியை இழந்த தாயின் உருக்கமான வேண்டுகோள்!!!
ஜனாதிபதி யாழ் விஜயத்தின் பின்னர் கடற்படைக்கு தனியார் காணிகளை சுவீகரிக்க திட்டம்.
கணவருக்கு புற்றுநோய் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனது காணியை தாருங்கள். தாயின் உருக்கமான வேண்டுகோள்!
எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ் வருகைதரும் ஜனாதிபதியின் விஜயத்தின் பின்னர் எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக பொது மக்களின் சுமார் நான்கு அரைப் பரப்பு காணியை சுவீகரிக்கும் அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது.
யாழ் ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட எழுவை தீவு இறங்குதுறைக்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணியே இவ்வாறு சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தால் விடுத்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் காணி உரிமையாளர்களின் ஒருவரான தாய் கருத்து தெரிவிக்கையில்.
எமது காணியை 90 ஆம் ஆண்டுகளின் பின்னர் கடற்படையினர் முகாம் அமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் நிலையில் எமது பூர்வீக காணியை இழந்து வாழ்ந்து வருகிறோம்.
தற்போது கடற்படையினர் பயன்படுத்தி வரும் காணியில் சிறிய வீடு ஒன்றை நாம் ஏற்கனவே கட்டி வாழ்ந்து வந்த நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எமது சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாதவர்களாக உள்ளோம்.
எனது கணவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்களை பராமரித்து வரும் நிலையில் கடற்படை அமைந்துள்ள எனது காணியின் ஒரு பகுதியை எனது மகளுக்கு சீதனமாக எழுதி வழங்கி உள்ளேன்.
நான் பல காலமாக பல அரச அதிகாரிகளிடம் எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கடற்படையினரிடம் இருந்து எனது காணியை விடுவித்து தருமாறு பல தடவைகள் கோரிக்கை முன்வைத்தேன் எதுவும் நடந்ததில்லை.
நாட்டின் ஜனாதிபதி மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் என தெரிவித்தமை ஊடகங்களில் பார்த்தேன். ஆனால் எனது காணியை கடற்படைக்கு சுபீகரிப்பது ஜனாதிபதிக்கு தெரியாதா என கேட்க விரும்புகிறேன்.
எனது பூர்வீக நிலத்தை கடற்படையினருக்கு கொடுப்பதற்கு தயார் இல்லை. எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு யாழ் வருகைதரும் ஜனாதிபதி எனது காணியை எனக்கே பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment