இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் கல்வித் துறையில் தற்போது நிலவும் பிற சவால்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ஆசிரியர்–அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் ஒரு கலந்துரையாடல் இன்றைய தினம் (13) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, அரசால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை குறித்து ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
முதலாம் தரத்திற்காக திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்கள் நிர்ணயிக்கப்பட்டபடி அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், பாடத்திட்ட (மொட்யூல்) தயாரிப்பில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும்
தொழில்நுட்ப சவால்களை தீர்த்து, ஆறாம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கல்வி சீர்திருத்த செயல்முறை அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், புதிய கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், சம்பள வேறுபாடுகள் மற்றும் அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.



Comments
Post a Comment