புழுதி விதைப்பு நெற்செய்கையாளர்களுக்கும் தடையின்றி பயிர் அழிவுக் காப்பீடு வழங்கப்படவேண்டும் - ரவிகரன் எம்.பி

 

புழுதி விதைப்பு நெற்செய்கையாளர்களுக்கும் தடையின்றி பயிர் அழிவுக் காப்பீடு வழங்கப்படவேண்டும்; சுற்று நிருபத்தில் ஏற்பாடுகளைக் கொண்டுவருவதற்கு குரல் கொடுப்பேன் - ரவிகரன் எம்.பி 

கமநல காப்புறுதிச்சபையினால் வழங்கப்படுகின்ற நெல் அழிவிற்கான இலவச காப்பீட்டைப் பெறுவதில் புழுதி விதைப்பு நெற்பயிற்செய்கையாளர்கள் எதிர்நோகும் தடைகள் களையப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

புழுதி நெல் விதைப்பு முறையை பின்பற்றும் விவசாயிகளும் நெல் அழிவிற்கான இலவசக் காப்பீட்டை தடையின்றிப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு கமநல காப்புறுதிச்சபையின் சுற்றுநிருபத்தில் ஏற்பாடுக்கொண்டுவருவதற்கு தம்மால் குரலெழுப்பப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவுமாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக் காலத்தில் புழுதி விதைப்பு முறையில் உலர் நிலத்தில் நெல்விதைப்பு மேற்கொள்ளும் நெற்செய்கையாளர்கள், பயிரழிவு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் கமநல காப்புறுதிச்சபையினால் வழங்கப்படுகின்ற இலவச காப்பீட்டைப் பெறுவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துவருவதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் ரவிகரன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்றயதினம் (12) முல்லைத்தீவு மாவட்ட கமநலக் காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் பி.குகன் அவர்களை நேரில் சந்தித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் புழுதிவிதைப்பு முறையைப் பின்பற்றுகின்ற நெற்செய்கையாளர்கள் காப்பீட்டைப் பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல் நிலமைக்கு விளக்கங்கோரியிருந்தார். 

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கமநல காப்புறுதிச்சபையின் உதவிப்பணிப்பாளர் க.குகன் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு பதிலளிக்கையில், 

குறிப்பாக காட்டு யானைகளால் நெல் அழிவு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலும், வெள்ள அனர்த்தம் மற்றும் வரட்சி போன்ற காரணங்களினால் நெற்பயிர்ச்செய்கைகள் அழிவடைகின்ற சந்தர்ப்பங்களில் கமநல காப்புறுதிச்சபையினால் விவசாயிகளுக்கு இலவச காப்பீடு வழங்கப்படுகின்றது. 

இருப்பினும் பெரும்போக நெற்செய்கைக்காலத்தில் புழுதிவிதைப்பு முறையில் மேற்கொள்ளப்படுகின்ற நெற்செய்கை அழிவு ஏற்பட்டால் சில சந்தர்ப்பங்களில் காப்பீட்டை வழங்கமுடியாத நிலை ஏற்படுகின்றது. 

கமநல காப்புறுதிச் சபையினால் நெல் விதைக்கப்பட்ட திகதியிலிருந்து நெல்வகையின் அடிப்படையில் நெல்லின் அறுவடைத் திகதியும் கணிக்கப்படுகின்றது. அந்தவகையில் நெல் அறுவடைத் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஏற்படும் வெள்ளம் மற்றும் வரட்சி அழிவுகள், காட்டுயானைகளால் ஏற்படும் அழிவுகளுக்கே இலவச காப்பீட்டினை கமநல காப்புறுதிச்சபையால் வழங்கமுடியும். 

ஆனால் புழுதி விதைப்பு முறையில் மேற்கொள்ளப்படுகின்ற நெற்செய்கைகளின் அறுவடைக்காலம் பிந்துகின்றது. கணிக்கப்பட்ட அறுவடைத் திகதியைக் கடந்தே அறுவடை இடம்பெறுகின்றது. 

இவ்வாறாக நெல் வகையின் அடிப்படையில் கணிக்கப்பட்ட அறுவடைத் திகதியைத் தாண்டியநிலையில் நெற்பயிற்செய்கை அழிவு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் கமநல காப்புறுதிச்சபையால் இலவசக் காப்பீடு வழங்கமுடியாது. 

புழுதி விதைப்பு முறைக்கான காப்பீட்டு ஏற்பாடுகள் கமநல காப்புறுதிச்சபையின் சுற்று நிருபத்தில் இல்லாமையினாலேயே இந்த நிலமை ஏற்படுகின்றது. 

இது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புழுதி விதைப்பு முறையினைப் பின்பற்றுகின்ற அனைத்து நெற்செய்கையாளர்களும் இந்தப்பாதிப்பினை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 

பெரும்போக நெற்செய்கைக்காலத்தில் புழுதி விதைப்பு முறையில் நெற்செய்கை மேற்கொள்ளும் எமது வன்னிப் பிராந்தியம் உள்ளிட்ட  வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நெற்செய்கையாளர்கள் கமநல காப்புறுதிச்சபையால் நெல்அழிவுகளுக்கு வழங்கப்படுகின்ற இலவச காப்பீட்டைப் பெறுவதில் பெருத்த சாவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றார்கள். 

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புழுதி விதைப்பு நெற்செய்கையாளர்களுக்கு, நெற்பயிற்செய்கை அழிவு ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இலவச காப்பீடுகள் வழங்கப்படுவதற்கு ஏற்றவாறு கமநல காப்புறுதிச் சபையின் சுற்று நிருபத்தில் ஏற்பாடுகளை கொண்டுவருவது குறித்து எம்மால் கவனஞ்செலுத்தப்படும். 

அந்தவகையில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பில் எம்மால் தீர்மானங்களை மேற்கொள்வோம். இவ்விடயத்திற்காக பாராளுமன்றிலும் எம்மால் குரல் எழுப்பப்படுமெனத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.