சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நடமாடும் சேவை - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நடமாடும் சேவை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு 

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் கரவெட்டி பிரதேசத்தில் நடைபெறவுள்ள முதியோருக்கான மருத்துவ முகாம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13)  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அரசாங்க  அதிபர் கருத்து தெரிவிக்கையில், ஒரு குழந்தை பிறந்தது முதல் முதியவராகும் வரை அரசாங்கம் பல உத்தியோகத்தர்களை நியமித்து சேவையாற்றி வருவதாகவும், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்ட நடமாடும் சேவைகளை மேற்கொண்டதன் மூலமாக, கிராமிய மக்களுக்கு இவ் நடமாடும் சேவை தேவைப்பாடுடையதாக காணப்படுவதாகவும், 60 வயதினை பூர்த்தி செய்த சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு  சுகாதாரப் பிரிவானது சமுதாய அமைப்புகளின் பங்குபற்றலின் மூலம் பொருளாதார, உடல் மற்றும் உளவியல் ரீதியில் நலிவுற்ற முதியோர் சமுதாயத்தினருக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உயர் தரத்திலான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இவ் மருத்துவ முகாம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாககவும் தெரிவித்தார். மேலும்  இவ் நடமாடும் சேவை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், முதலாம் நாள் படுக்கையில் உள்ள முதியவர்கள் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்த்து ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்குதல் எனவும், இரண்டாம் நாள் நிகழ்வாக பொது மண்டபத்தில் மருத்துவ முகாம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இவ் மருத்துவ முகாம் நெல்லியடி மத்திய கல்லூரியில் பெப்ரவரி 6 ,7 ஆம் திகதிகளில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

மேலும் இவ் நடமாடும் சேவையில் தொற்றா நோய்கள், கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் மற்றும் எலும்பியல் மருத்துவம் போன்ற மருத்துவ பரிசோதனைகள் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். 

இக் கலந்துரையாடலில் நடமாடும் சேவையில் பங்குபற்றவுள்ள மருத்துவர்கள் தாதியர்கள் உதவியாளர்கள் எண்ணிக்கைகள், மருந்தகத்தில் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள், வாகன ஒழுங்குகள் மற்றும் முதியோர் சங்கம் மற்றும் கிராமிய சங்கங்களின் பங்களிப்புகளை பெற்றுக் கொள்ளல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் போன்றன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. 

இக் கலந்துரையாடலில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.பிரிந்திகா, பிரதேச வைத்திய அதிகாரி திரு வி. கமலநாதன், தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி திரு. இளங்கோ ஞானியார், வைத்தியர் எஸ். குணநாதன் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிநிதி வைத்தியர் வி. சண்முகராஜா கரவெட்டி பிரதேச செயலாளர், கரவெட்டி கிராம அபிவிருத்தி சங்க தலைவர், பிரதேச மட்ட முதியோர் சங்க தலைவர், மாவட்ட, பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.