துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உயிலங்குளம் மாதிரி கிராம வீடுகளுக்கு நிரந்தர தீர்வு.
மாவட்டச் செயலாளர் தலைமையில் கள ஆய்வு – மீதமுள்ள வீடுகளுக்கும் புதிய வீடுகள் வழங்க உறுதி.
துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உயிலங்குளம் கிராம அலுவலர் பிரிவில், 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்பகுதி கூரை, கடந்த 08.01.2026 ஆம் திகதியன்று திடீரென பொறிந்து வீழ்ந்தது. இதனால் குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் கடும் அச்சத்துக்கும் பாதுகாப்பு அபாயத்திற்கும் உள்ளாகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக மாவட்ட செயலாளருக்கு அறிக்கையிடப்பட்டதைத் தொடர்ந்து, மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார நிலை குறித்து உரிய தீர்வுகளை மேற்கொள்ளும் நோக்கில், இன்றைய தினம் மதிப்புக்குரிய மாவட்ட செயலாளர் தலைமையில் விசேட கள ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு, குறித்த வீட்டை நேரில் பார்வையிட்டதுடன், மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஏனைய வீடுகளின் தற்போதைய நிலைமை, கட்டுமானத் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பிலும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
மேற்படி மாதிரி கிராமத்தில் மொத்தமாக 50 வீடுகள் அமைந்துள்ள நிலையில், அவற்றில் பல வீடுகள் காலப்போக்கில் தரம் குறைந்த நிலையில் காணப்படுவதுடன், மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களையும் பாதுகாப்பு அபாயங்களையும் எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், மதிப்புக்குரிய மாவட்ட செயலாளரின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் தலையீட்டின் பயனாக, ஏற்கனவே 33 வீடுகளுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய கள ஆய்வின் போது, மீதமுள்ள வீடுகளின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவற்றிற்கும் புதிய வீடுகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் உறுதியளித்தார். மக்களின் பாதுகாப்பும் மரியாதைக்குரிய வாழ்வும் அரசின் முதன்மை பொறுப்பாகும் என்பதை வலியுறுத்திய மாவட்ட செயலாளர், இந்த மாதிரி கிராம வீட்டு திட்டம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளரின் இந்த உறுதியான அறிவிப்பினால், பல ஆண்டுகளாக பாதுகாப்பற்ற வீடுகளில் வசித்து, பல்வேறு துன்பங்களையும் அச்சங்களையும் அனுபவித்து வந்த மக்கள், தமக்கான தீர்வு இறுதியாக கிடைக்கப் பெற்றுள்ளதாக உணர்ந்து, பெரும் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக, அரச அதிகாரிகளின் நேரடி கள ஆய்வும், உடனடி தீர்வு உறுதியும் மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் நிச்சயத்தையும் வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கை, அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையையும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான மாவட்ட நிர்வாகத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக பொதுமக்கள் பாராட்டியுள்ளார்கள்.




Comments
Post a Comment