கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் - வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு.
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் - வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு.
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக “கிவுல் ஓயா” நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு தனது ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது
கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் இன்று (01) கரைதுறைபற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியில் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு இதனை தெரிவித்துள்ளது
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதிமொழிகளாக முன்வைத்து ஆட்சி
பொறுப்பேற்றுள்ளது.
இருப்பினும் “நாட்டின் அபிவிருத்தி” என்ற பெயரில் வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் “கிவுல் ஓயா”
நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் மேற்கூறிய உறுதிமொழிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும்.
இருப்பினும் அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் காணி இல்லாத தமிழ் மற்றும்
முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் இம்மக்களை அபிவிருத்தித்
திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம்ர அதனை விடுத்து வெளிப்பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது.
இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல் கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி “கிவுல் ஓயா”
நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த
கல்லு கிராமத்திற்கு அண்மையாக வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம் பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்நீர்த்தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்
மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
இதன் விளைவாக வெடிவைத்த கல்லு,
ச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்பூவரசங்குளம், காஞ்சூரமோட்டை உள்ளிட்ட பாரம்பரிய
கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில்
மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.
மேலும் 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் “ஒதுக்குக் காடாக” அறிவிக்கப்பட்ட
பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காடு சுமார் 4000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதியும் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை
உருவாகியுள்ளமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
அதேபோல் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல்
பிரதேசங்கள் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரினுள் மூழ்கப் போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலமே தெரிய வருகிறது. இது நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.
இத்தகைய பின்னணியில் இந்நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குனாறிமலை
பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதை “தொல்லியல் பாதுகாப்பு” என்ற பெயரில்
கட்டுப்படுத்தும் நிலையில் அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய
அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள
கொக்குத்தொடுவாய் மத்தி கொக்குத்தொடுவாய் வடக்கு கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும்
கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய ஆமையன் உந்தராயன் குளம் அடையகர்த்தான் படுகாட்டுக் குளம் சாம்பான் குளம்
போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப் பகுதியில் தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு
திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1990 ஏக்கர் காணிகள் தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு
திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இது இப்பிரதேசங்களின் இனப்பரம்பல்
அமைப்பையும் சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாகவே
பார்க்கப்படுகிறது. எனவே அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும் உள்ளூர் காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தித் திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைக்கவும் வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும் உள்ளூர் சமூகங்களின் காணி வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இலங்கையில் நிலையான அபிவிருத்தி சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் அது உள்ளூர் மக்களின் உரிமைகள் மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலமே சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Comments
Post a Comment