சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு.
சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.
யாழ் பல்கலைக்கழக பீடங்களின் மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்றது.
மேலும் தெரிவிக்கையில், 1948 ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ச்சியான இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டே வருகின்றனர்.
பௌத்த மயமாக்கல், காணி அபகரிப்பு, சிங்கள குடியேற்றங்கள், அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை என ஒவ்வொரு விதமாக தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கிறது. இந்த அடக்குமுறைகள் தொடரும் வரை எமது போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வோம்.
இலங்கை சுதந்திர தினத்தன்று வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் பேரணி டிப்போ சந்தியை சென்றடையும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காலை 11 மணிக்கு ஆரம்பித்து காந்தி பூங்கா வரை நடைபெறவுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எவ்வித பேதமுமின்றி கலந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அணிதிரள வேண்டும் - என்றனர்.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தனர்.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூக பிரதிநிதிகள் சில தினங்களாக பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment