சட்டவிரோத தொழிலுக்கு விரைவான நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர் உறுதி.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது!
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம்(31) விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மாவட்டத்தின் கொக்குளாய், நாயாறு அளம்பில், முல்லைத்தீவு முதலான கடற்கரைகளுக்கு சென்று சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் கள ஆய்வினை மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் மாவட்ட மீனவர்களுக்கும் கடத்தொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் மற்றும் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ உமாமகேஸ்வரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடைபெறுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் கடற்தொழில் திணைக்களமும் கடற்படையினரும் அசமந்த போக்காக இருப்பதாகவும் அவர்கள் அமைச்சரிடம் தங்களது அதிர்ப்தியை வெளியிட்டனர்.
மேலும் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகள் மீதும் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் இந்த சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் மாத்திரம் அரசாங்கத்தினுடைய நடவடிக்கை தமக்கு அதிர்ப்தி அளிப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
எனவே சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தா விட்டால் தொடர்ந்து தாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த கடற்தொழில் அமைச்சர் கடத்தொழில் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை தாம் விரைந்து நிவர்த்தி செய்வதாகவும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் சட்டவிரோத மீன்பிடியை முழுமையாக தடை செய்வதற்கு மாவட்ட அரசாங்க அதிபர், கடற் தொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸ் மற்றும் மீனவர்களோடு இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துவதோடு ஒவ்வொரு கிழமையும் நடைபெறுகின்ற விடயங்களை கள ஆய்வு செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கடற்தொழில் அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினர்.
எனவே எதிர்காலத்தில் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்வதற்கு புதிய விதிகள் அமைச்சரவையில் கொண்டுவரப்படுவதாகவும் அவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதிகளவான தண்டப் பணத்தினை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் செலுத்த நேரிடும் எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
எது எவ்வாறு இருப்பினும் முற்று முழுதாக சட்டவிரோத மீன்பிடியை தடை செய்வதற்கு தன்னாலான முழுமையான அதிகாரத்தினை பயன்படுத்தி விரைந்து அவற்றுக்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மீனவர்களிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், கடற் படையினர், பொலிசார், மீனவர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.








Comments
Post a Comment